Wednesday, 7 August 2013

கருணாமிர்தசாகரம் என்னும் கலங்கரைவிளக்கம்

கருணாமிர்தசாகரம்  என்னும்  கலங்கரைவிளக்கம்
-      முனைவர் அரிமளம் சு.பத்மநாபன், புதுச்சேரி.

                  மிகப் பழங்காலத்திலேயே இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழ்களுக்கும் தனித்தனியே இலக்கணங்கள் வகுக்கப்பட்டுப் பல நூல்கள் எழுதப்பட்டிருந்தன என்பதும், அவை காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் அழிந்துபட்டன என்பதும் கி.பி.1892ஆம் ஆண்டில் உ.வே. சாமிநாதையரவர்களால் பதிப்பிக்கப்பட்ட இளங்கோவடிகளருளிச் செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும்  என்ற  நூலின் மூலமாகவே உறுதிப்படுத்தப்பட்டது. தமிழிசையின் தொன்மை, இலக்கணம், வரலாறு, கலைஞர்கள், இசைக் கருவிகள் எனப் பல்வேறு கூறுகளையும் முழுமையாக அறிந்துகொள்ள அடிப்படையாக விளங்குவது சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையே யாகும்.
                  இந் நூலை அடிப்படையாகக் கொண்டு  கிபி. 1917 ஆம் ஆண்டு தஞ்சாவூர் ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் தமிழிசையின் தொன்மை வரலாற்றையும் அதன் சிறப்பியல்புகளையும் முதன் முதலாக விவரித்து ‘கருணாமிர்த சாகரம்’ என்னும் மிகப் பெரிய நூலை எழுதிப் பதிப்பித்தார்.  ‘கருணாமிர்த சாகரம் என்னும் இசைத் தமிழ் நூல் - சுருதிகளைப் பற்றியது’ என்றே பண்டிதர் நூலிற்குப் பெயரிடுகிறார். பல நூற்றாண்டு கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழிசை குறித்து வெளிவந்ததால் தற்கால இசை நூல்களுள் இதனையே முதல் நூலாகக் கொள்ள வேண்டும், தமிழிசையியல் என்னும் பெருங்கடலில் பயணம் செய்வோருக்குக் ‘கருணாமிர்தசாகரம்’ ஒரு கலங்கரைவிளக்கமாகத் திகழ்ந்து வருகின்றது. ஏனெனில், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியம், பிற இலக்கியங்கள் வழிப் பெற்ற சான்றுகளின் அடிப்படையிலும் பிறமொழி நூல்கள், வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையிலும் மிகவும் ஆழமாக ஆய்வு செய்து எழுதப்பட்டது இப்பெருநூல்.
                  ‘தமிழிசை பற்றித் தமிழில் ஒன்றுமில்லை’ என்று கருதிய காலம் பண்டிதரின் காலம். இதனைப் பண்டிதர், “சங்கீதத்திற்கு சங்கீத ரத்னாகரர் எழுதிய நூலே முதல் நூல் என்றும், அது சிறந்ததென்றும், தமிழ் மக்களுக்குச் சங்கீதமே தெரியாதென்றும் சொல்லு கிறார்கள்” என்று வேதனையுடன் குறிப்பிடுகின்றார். இக் குறையைப் போக்கும் வகையில், பல ஆண்டுகள் இசை  பயின்றும், இசை நூல்களைக் கற்றும், இசையறிஞர்களோடு கலந்துரையாடியும் பழந் தமிழ்ப் பனுவல்களைத் திரட்டியும், தமிழிசை குறித்த நீண்ட வரலாற்றையும், நூணுக்கங்களை யும் ஆய்ந்து அறிந்து கருணாமிர்த சாகரம் நூலை எழுதி, வெளியிட்டார். இந்நூல் பெருந்தாளிள் கால் (A 4) அளவினதாய் 1346 பக்கங்களில் நான்கு பாகங்களைக் கொண்டு அமைந்தது.
                  நூலின் முதல் பாகம், இசையின் பிறப்பு, தமிழிசையின் தோற்றம், தொன்மை, வளர்ச்சி, மூன்று தமிழ் சங்கங்கள், குமரிக் கண்டம், கடல் கோள்கள், கோயில் கல்வேட்டுகள் ஆகியன குறித்துப் பல்வேறு சான்றுகளுடன் மிகவும் விரிவாக விளக்குகின்றது. மேலும், அக்காலத்தில் வாழ்ந்த இசைக் கலைஞர்கள், இசைப் புரவலர்கள், இசை வல்லுநர்கள் ஆகியோரின் நீண்ட  பெயர்ப் பட்டியல்கள் அகர வரிசையில்  தரப்பட்டுள்ளது. ‘இந்திய சங்கீதச்  சரித்திரச் சுருக்கம்’  என்று முதல் பாகத்திற்குப் பண்டிதர் பெயரிட்டிருக்கிறார்.
                  இரண்டாம் பாகம் சுருதிகளைப் பற்றி விளக்குகின்றது. ஏழிசை எனப்படும் ஏழு சுரங்களுக்கான சுருதி(அலகு)களின் மொத்த எண்ணிக்கை 24 என்றும், தற்போது வழக்கிலுள்ள 22 சுருதிகள் என்னும் இசையியல் கொள்கை தவறு என்றும் பல்வேறு  நிலைகளில்  விவாதித்து முடிவுரைக்கின்றது.  சாரங்கதேவர் முதலான இந்திய இசை யறிஞர்களின் கருத்துக்கள் மட்டுமின்றி மேலை நாட்டு இசை யறிஞர்களின் கருத்துக்களும் ஆராயப்பட்டுள்ளன. இப்பகுதி முழுமையான இசை இயற்பியல் பற்றியது. இப் பகுதிக்கு, ‘இருபத்திரண்டு  சுருதிகள்’  என்று பண்டிதர் பெயரிட்டிருக்கிறார்.
                  மூன்றாம் பாகத்தில் தமிழிசை இயல் குறித்த பல செய்திகள் தரப்படுகின்றன. ஏழு சுரங்கள், பெரும் பண்கள், திறப் பண்கள், பண்ணுப் பெயர்த்தல், ஆலாபனை, முற்கால, பிற்கால நூல்களில் கூறப்பட்டுள்ள ராகங்களின் தொகை, இணை, கிளை, பகை, நட்பு என்னும் பொருந்திசைச் சுரங்களைக் கண்டுகொள்ளும் முறைகள், வட்டப்பாலை, ஆகியன பற்றி சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் வழி நின்று விளக்கப்படுகின்றது. இப் பகுதிக்கு, ‘இசைத் தமிழ்ச் சுருதிகள்’ என்று பண்டிதர்  பெயரிட்டுள்ளார்.
                  நான்காம் பாகத்தில் இளங்கோ அடிகள்  குறிப்பிட்ட வட்டப்பாலை, ஆயப்பாலை, சதுரப்பாலை,  திரிகோணப்பாலை குறித்தும், மாந்தன் உடலுக்கும் யாழ்வடிவுக்கும் ஒப்பீடு, யாழ் வகைகள் குறித்தும் விளக்குகின்றது. வீணையின் அமைப்பை மனித உடலோடு ஒப்பிட்டு விளக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் ‘பூர்வ இந்தியர்களின் நாகரிகமும் அவர்கள் அரசாட்சியும் என்ற ஒரு பகுதியும் இடம்பெற்றுள்ளது. இசைக் கணிதம் பற்றியும் விளக்கப்படுகிறது. ‘கர்நாடக சங்கீதத்தின்  சுருதிகள்’ என்று பண்டிதர்  இப் பகுதிக்குப் பெயரிட்டுள்ளார்.
                  அக்காலத்தில்  வாழ்ந்த   அரிகேசவநல்லூர் முத்தையா பாகவதர், மு.ரா. கந்தசாமிக் கவிராயர்,   நெல்லையப்ப பிள்ளை ,   மு. இராகவையங்கார்,     தமிழ்த்  தென்றல்  திரு. வி. க.,  உ.வே.சாமிநாதையர், முதலான தமிழ்ச் சான்றோர்கள் பலரும் இந் நூலுக்குப் பாமாலைகளும் பாராட்டுரைகளும்  சாத்து கவிகளும்  சூட்டி யிருப்பதிலிருந்தே  இப் பெரு நூலின் பெருமை விளங்கும். விபுலானந்தரின் யாழ் நூல் தொடங்கி இன்றளவும் வந்துகொண்டிருக்கும்  இசையியல் நூல்களுக்கெல்லாம் கருணாமிர்த சாகரமே முன்னோடி நூல் என்பதில் எள்ளளவும்  ஐயமில்லை.No comments:

Post a comment