Wednesday 7 August 2013

ஔவை தி.க. சண்முகம்

நாடக வரலாற்று  நாயகர் ஔவை  தி.க. சண்முகம்

தமிழ் வரலற்றில் குறிப்பிடத் தக்க இரண்டு மகத்தான மனிதர்களின் தன் வரலாற்று (சுயசரிதை) நூல்கள் இருபதாம் நூற்றாண்டில்  வெளிவந்தன. ஒன்று அந்நூற்றாண்டின் தமிழ் இலக்கியம், இசை தொடர்பாகவும், மற்றொன்று அந்நூற்றாண்டின் தமிழ் நாடகம் தொடர்பாகவும் வரலாற்று நிகழ்வுகளைப் பதிவுசெய்தன. முதல் நூல் 1950 ஆம் ஆண்டில் வெளிவந்த  ‘என் சரித்திரம்’. இதனை எழுதியவர் ‘தமிழ்த் தாத்தா’ என்று போற்றப்படும் டாக்டர் உ.வே.சாமிநாதையர். இரண்டாம் நூல் 1972 ஆம் ஆண்டில் வெளிவந்த  ‘எனது நாடக வாழ்க்கை’.  இதனை எழுதியவர்  ‘முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினம்’ என்றும், ‘ஔவை’ என்றும் போற்றப்படும் தி.க. சண்முகம் ஆவார்.  தமிழ் உலகில் எல்லோராலும் அன்புடன் உச்சரிக்கப்படும்‘டி.கே.எஸ்.’ என்ற மூன்றெழுத்துக்களுக்கு சொந்தக்காரர்  தி.க.சண்முகம். உ.வே.சா. அக்காலத்தில் வாழ்ந்த  மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கோபால கிருஷ்ண பாரதியார் முதலான முதுபெரும் அறிஞர்களிடம் தமிழையும் இசையையும் கற்றுத்தேர்ந்து, பல பட்டங்களைப் பெற்று பல்கலைக் கழகத்தின் உயரிய பட்டத்தையும் பெற்றார். சண்முகம் அக்காலத்தில் வாழ்ந்த நாடகத் தந்தை என்றும், தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்  என்றும் இன்றளவும் போற்றப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள், சதாவதானம் தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர், மயிலை. கந்தசாமி முதலியார் ஆகிய பெரும் நாடகப் புலவர்களிடம்  முத்தமிழையும்  கற்றுப் பிற்காலத்தில்  புகழின் உச்சிக்கே சென்றார்.  அந்நாளில் பல்கலைக்கூடங்களாகத் திகழ்ந்த பாய்ஸ் கம்பெனி நடிகராக ஆறாம் வயதில்  வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய  டி.கே.எஸ். அறுபதாம் வயதில் உலகறிந்த நாடகக் கலைஞராக மட்டுமின்றி நாடகத்திற்கு  இலக்கணமாகவும் திகழ்ந்தார்.  ஏறத்தாழ  55 ஆண்டுகள் ஒரு சிறந்த  நாடகக் கலைஞனாகவே பயணித்த டி.கே.எஸ். 1918 முதல் 1948 ஆம் ஆண்டு  வரையிலான  தம் வாழ்க்கை வரலாற்றின் முதல் பகுதியாக எழுதி வெளியிட்டதே  ‘எனது நாடக வாழ்க்கை’ என்னும் நூலாகும். இந்நூல் பற்றிய சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களின் பின் வரும் மதிப்பீடு மிகவும் பொருத்தமானது என்பதுடன் குறிப்பிடத்தக்கதும் ஆகும்.
Ø  இந்நூல் தமிழ் இலக்கியக் களஞ்சியத்துக்குப் புதிய வரவு.
Ø  தமிழ் நாடக மேடையைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் தரும் ‘நாடகக் கலைக் களஞ்சியம்’.
Ø  இது சரித்திர நூல் மட்டுமல்ல; நாடக உலகைப் பற்ய மிகச் சிறந்த தகவல் நூல்.   
இந் நூலின் முதல் பதிப்புக்கான முன்னுரையில் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்  ‘நாடகத் துறையில்  தொல்காப்பியர்’  என்று டி.கே.எஸ். அவர்களைப் போற்றிப் புகழ்ந்திருப்பதற்கு  இந் நூல் தக்க சான்றாகத் திகழ்கிறது. 

தமிழுலகிற்கு நூலின் கொடை :  இந்நூல் அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மிக முக்கியமான  நிகழ்வுகளை விவரிப்பதன் ஊடே ஒரு அரை  நூற்றாண்டுத் தமிழ் நாடக வரலாற்றையும் பதிவு செய்துள்ளது. நாடகக் கம்பெனிகள் பற்றிய செய்திகளுடன் தொடங்கும் நூல் தமிழ்த் திரையுலகின் தொடக்க காலத் திரைப்படக் கம்பெனிகளுடன் நிறைவடைகிறது.
            தமிழ் நாடகம் குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபடுவோர்க்கெல்லாம் இந்நூலே ஒரு சிறந்த தகவல் தரும் களஞ்சியமாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. சங்கரதாஸ் சுவாமிகள் குறித்தும், பாய்ஸ் கம்பெனிகள் குறித்தும் வரலாற்று ஆய்வுகளுக்கு டி.கே.எஸ். எழுதியுள்ள நூல்களே அடிப்படை ஆதாரங்களாகத் திகழ்கின்றன. சங்கரதாஸ் சுவாமிகளின் வரலாறு, படைப்பு கள், இசைத்திறம், தமிழ்ப் புலமை, நடிப்பாற்றல், பண்பு நலன்கள் என ஒரு முழுமையான படப்பிடிப்பு இந்நூலில் செய்யப்பட்டுள்ளது. இந் நூல் இல்லை யேல் சுவாமிகளின் வரலாறு தமிழுலகிற்கு முழுமையாகக் கிடைத்திருக்காது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
            மேலும், தம் சம காலத்தில் தலை சிறந்து விளங்கிய நாடகக் கலைஞர்களைப் பற்றிய பல அரிய தகவல்களை விருப்பு வெறுப்பின்றி ஆங்காங்கே பதிவு செய்துள்ளார். மதுரை மாரியப்ப சுவாமிகள், வேலு நாயர், கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள்  தொடங்கி, என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன்  வரை  நூற்றுக்கும் மேற்பட்ட  கலைஞர்களைப் பற்றித் தன் வரலாற்றில் குறிப்பிடுகிறார் சண்முகம். நாடகத்தில் பங்கு பெறும் பிற கலைஞர்கள், ஆசிரியர்கள், கம்பெனி முதலாளிகள், தொழிலாளர்கள், புரவலர்கள்  என ஒன்று விடாமல் பதிவு செய் யப்பட்ட ஒரு சிறந்த ஆவணமாக விளங்குகிறது இந்நூல். நூற்றுக்கும் மேற் பட்ட  நாடகக் கம்பெனிகள், பாய்ஸ் கம்பெனிகள், ஸ்பெஷல் நாடகக் குழுக் கள் ஆகியன பற்றிக்  குறிப்பிடுவதோடு  நில்லாமல்,  அவை சந்தித்த பல இடர்ப்பாடுகளையும்  அவற்றையும் கடந்து அவை நிகழ்த்திய சாதனைகளை யும் மிகவும் கவனமாகப் பதிவு செய்துள்ளது இந்நூல். நாடகக் கலைஞர்களுக் கிருந்த சமூக மதிப்பு, வெகுஜன ஆதரவு, கலைஞர்களின் வாழ்க்கை நிலை பற்றியும் விவரிக்கிறது.
            இச்செய்திகளுக்கு இடைஇடையே சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள், காந்திஜி, நேருஜி போன்ற தலைவர்களின் தமிழக வருகை, சுதந்திரப் போராட்டத்தில் நாடகக் கலைஞர்களின் பங்களிப்பு, மகாகவி பாரதியின் பாடல்கள் தேச உடைமை ஆக்கப்பட்ட வரலாறு, அதற்குத் தம்முடைய பங்களிப்பு , இந்திய சுதந்திர தினம், காந்திஜியின்  மரணம்  என வரலாற்றுத் தகவல்கள் ஏராளம், ஏராளம்!      
இவை தவிர, அக்காலத்தில் வாழ்ந்த மாமனிதர்கள், அருளாளர்கள், அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள்  என அனைவருடனும் அவருக்கு இருந்த நட்பு, தொடர்புகள் பற்றியும் வரலாற்றுப் பின்னணியுடன் நேர்மையாக விவரித்திருக்கிறார் ஔவை சண்முகம்.  பள்ளிப் படிப்பையே அறியாத பாய்ஸ் கம்பெனி நடிகர் பின்னாளில் எழுதிய தமிழ்  நூல்கள்  பல்கலைகழக மாணவர்களுக்குப் பாட நூல்களாக விளங்குவதைவிட  டி.கே.எஸ். அவர்களின் ஆற்றலைப் பறைசாற்ற வேறென்ன வேண்டும். அவருடைய மொழிப் புலமைக்கும்  எழுத்தாற்றலுக்கும் அவருடைய நூல்களே  வாழும் சான்றுகளாகும்.  இந்நூற்றாண்டில்  அவர் தம் நாடக வாழ்க்கையின் இரண்டாம் பகுதியும் அவர் திருமகனார் கலைவாணன் அவர்களால் வெளியிடப்பட வேண்டும்  என்பதே தமிழன்பர் களின்  பெரு விருப்பமாகும்.   
       வாழ்க டி.கே.எஸ். புகழ்!                                             வளர்க நாடகக்கலை! 


No comments:

Post a Comment